ஆரஞ்சு பட்டையுடன் கூடிய அசட்டு நீலத்தில் குளித்திருந்தது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தான் வித்யா குடியிருந்தாள். கணவன் வெங்கட், பையன் ப்ரணவ், மாமனார், மாமியார், நாய்க்குட்டி என கச்சிதமான(?) குடும்பம். வேறு எந்த பிக்கல் பிடுங்கல்களும் இல்லை. எந்தப் பிரச்சனையும் இல்லையெனில் இந்த கதை எதைப் பற்றி?
முதல் பத்தியில் சொன்ன நாய்க்குட்டியைப் பற்றி.
அய்யோ, அந்த நாய்க்குட்டியைப் பிரச்சனை என்று சொன்னால் வித்யா பத்ரகாளியாகி விடுவாள்.
அவ்வளவு செல்லம் அது.
மன்னிக்கவும், அது இல்லை, அவன்.
அவன் பேர் கிட்டு.
என்னதான் கிட்டு இந்த வீட்டு தத்துப் பிள்ளையாய் இருந்தாலும் அவன் பூர்வீகம் சென்னையின் ஒரு முட்டு சந்துதான்.
ஆம், கிட்டு ஒரு நாட்டு நாய்க்குட்டி. நாய் பிடிக்காதவர்கள் தெரு நாய் அல்லது சொறி நாய் என்றும் விளிப்பதுண்டு.
உண்மையில் கிட்டு துடைத்து விட்டது போல் ஒரு சுத்தம்.
ஒரு உண்ணியோ சொறியோ கிடையாது.
கிட்டு தெருவிலிருந்து பிரமோஷன் வாங்கி இந்த குடியிருப்புக்கு வந்தது ஒரு தனி கதை. ஒரு முறை பாட்டி வீட்டிற்கு சென்ற ப்ரணவ் க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில், இந்த அழகிய பிரவுன் வெள்ளைக் குட்டி குறுக்கே ஓட,
பந்து அதன் மேல் பட்டு, குட்டி வீல் வீல் என்று கத்த, ப்ரணவ் அதை ப்ளூ க்ராசுக்குத் தூக்கிக் கொண்டு ஓட, மீதிக் கதையை ஊகிப்பது வெகு சுலபம்.
எப்படியோ குட்டி,
ஓட்டைகள் போட்ட பெட்டியில் பெங்களூர் வரை வந்தாகி விட்டது.
வித்யா, அவள் கணவன் இருவருக்கும் நாய் என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் க்யூபா, கீபா என்று போய் வந்து,
வளர்த்தால் இந்தய நாய் தான் வளர்க்க வேண்டும் என்ற கொள்கை வேறு. மாமனார் மாமியாரும் முன்பு நாய் வளர்த்தவர்கள்தாம். எனவே ஏதும் பிரச்சனை இருக்காது என்று நினைத்த வித்யாவின் தலையில் முதல் இடி இறங்கியது.
‘எங்க சிண்டுவைப் பார்த்த இடத்தில கண்ட நாயையும் வெச்சு பாக்க ஒரு போதும் முடியாது’ – இது மாமனாரின் வாதம்.
‘என்னம்மா இது,
தெரு நாய் போல இருக்கே. என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில வெச்சாலும்….’
– இது மாமியார்.
‘என்ன செய்யறதும்மா, ப்ரணவ் ஆசைப்பட்டுட்டான், இப்ப என்ன விரட்ட முடியுமா? நீங்களே சொல்லுங்க?’ – இது அப்பாவி முகமூடி அணிந்த வித்யா.
‘அதெல்லாம் முடியாது,
அந்த கழிசடைக் கிட்டுவ வெளிய தள்ளிடு, ஈசியா பொழச்சுக்கும், தெருத்தம்பிதானே அது’
என்று மாமனார் அபிப்பிராயப்பட,
அப்போது தீவிரமாய் நாய்க்கு பேர் யோசித்துக் கொண்டிருந்த ப்ரணவ், தாத்தாவின் வாய் தவறி விழுந்த ‘கிட்டு’
வைப் பிடித்துக் கொண்டான்.
‘ஹை, தாங்க்ஸ் தாத்தா,
இன்னியில இருந்து இவன் பேர் கிட்டு.
கம் ஆன் கிட்டு!
லெட்ஸ் ப்ளே!’ என்று குதித்தான் ப்ரணவ்.
‘நைஸ் நேம்!’ – இது வெங்கட். வித்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
நாமகரணம் செய்த கையுடன் பக்கத்துத் தெருவில் இருந்த கால்நடை மருத்துவர் வீட்டிற்கும் சென்று வந்தாகி விட்டது. ப்ரணவுக்குக் கூட இவ்வளவு ஊசி போட்டிருப்போமா என்று வித்யாவுக்கு சந்தேகம் வரும் படி, அவ்வளவு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டது கிட்டு. மைக்ரோ சிப் கூட பொருத்திக் கொண்டது. ‘நியூடர்’ அதாவது கருத்தடை செய்ய வேண்டும் என்று ‘வெட்’ சொன்னார். ‘அடச்சே, அது மஹா பாவம்,
வாயில்லா ஜீவன்,
அது சந்ததியே அழிஞ்சு போயிடும்’ என்ற மாமியாரின் கருத்துக்கு அதிசயமாக வித்யாவும் தலையாட்டினாள். கிட்டு தப்பித்தது.
கிட்டு வந்த புதிதில் கொஞ்சம் அடங்காப்பிடாரியாகத்தான் இருந்தது. இந்த பிரச்சனை வீட்டோடு நின்றிருந்தால் தேவலாம்.
குடியிருப்பவர் சந்திப்பு வரை வந்துவிட்டது. அந்த காலத்தில் அஞ்சலிப் பாப்பாவிற்கு வந்த நிலைமை இப்போது கிட்டுவிற்கு.
‘உங்க நாய் நைட்ல குரைக்குது.” – கிரவுண்ட் ஃப்லோர் ஆசாமி.
“ஏதோ பிராண்டுற மாதிரி சவுண்ட் கேக்குது” – வித்யா வீட்டிற்கு கீழே குடியிருப்பவர்.
இதெல்லாம் சகஜம்தான் என்று வித்யா எண்ணினாலும்,
அடுத்து வந்த குற்றச்சாட்டு அக்கிரமம்.
“எங்க நாய் வாகிங் போகும் போது உங்க நாய் பயமுறுத்துது”. வோடஃபோன் விளம்பரத்தைப் பார்த்து அந்த மூக்கு சூம்பிப் போன நாயை வாங்கியிருந்தனர் அந்த வீட்டினர். அது பெண் நாய் வேறு.
வேற்று கிரகத்தில் இருந்து இறக்குமதி போல் இருந்த அதைக் கண்டால் எந்த கவுரவமான ஆண் நாய்க்குதான் ஆசையாய் இருக்காது? இயற்கையின் விதியடா அது! வித்யாவும் வெங்கட்டும் மனதிற்குள் திட்டினாலும்,
‘சரி, எங்க நாய ஒழுங்கா ட்ரைன் பண்றோம்” என்றுதான் சொல்ல முடிந்தது.
கிட்டுவிற்கு ரோஷமாகி விட்டதோ என்னவோ, வெகு சில நாட்களிலேயே சமத்தாகி விட்டது. எல்லா அபார்ட்மென்ட் நாய்களையும் போல, பால்கனியில் காலைக் கடன்களைச் செய்யக் கற்றுக் கொண்டு விட்டது.
முதலில் குடியிருப்பில் ‘பின் ட்ராப் சைலன்ஸ்’ இருக்க வேண்டும் என்று விழைந்த அது, தன் எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டு வித்யா வீட்டுக் கதவு தட்டப்படும் போது மட்டும் குரைத்தது, வித்யா வீட்டை மட்டும் காவல் காத்தது. கீழ் வீட்டு சப்பை மூக்கியைப் பற்றிக் கூட அவ்வளவாக நினைப்பதில்லை.
தினசரி நடை, பெடிக்ரீ சாப்பாடு, அவ்வப்போது சொஷியலைசிங்குக்கு நாய்கள் கிளப், நாயுள்ள நண்பர்களின் வீடுகள் என ராஜ போக வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டது கிட்டு.
ஒரு நாள் காலை,
தொலைபேசி அலறியது.
வெங்கட் எடுத்து ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் பேசியவர் வெங்கட்டின் கல்லூரி நண்பர்.
“ஹை ஸ்ரீதர், சொல்லு!
என்ன இவ்ளோ எர்லீயா ஃபோன் பண்றே? என்ன விஷயம்?”
“அது வந்து.. எப்டி சொல்றதுன்னே தெரியலடா”
“என்னடா, எனி ஃபேமிலி ப்ராப்ளம்?
ஹௌ கேன் ஈ ஹெல்ப்?”
“ஹ்ம்ம், அது… எங்க டெய்சி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருந்திச்சு. சுருண்டு சுருண்டு படுத்துக்கிட்டு, சரியா சாப்பிடாம. நேத்து அதோட இடத்துக்குப் போய் பாத்தா, மூணு குட்டி!”
“வாவ், தட்ஸ் அ சர்ப்ரைஸ்!
அதுவும் டெய்சி அழகா புசுபுசுன்னு இருக்குமே!”
“அதாண்டா அது ப்ரெக்னன்ட் ஆன விஷயமே எங்களுக்குத் தெரியாம போச்சு. இதுல விஷயம் என்னன்னா, அதுல ரெண்டு குட்டி, அச்சு அசல் கிட்டு மாதிரியே இருக்கு. ஸோ, இது நம்ம ஃபாமிலி மாட்டெர்.”
வெங்கட்டுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது. அருகில் உட்கார்ந்திருந்த வித்யாவைக் கலவரமாய்ப் பார்த்தான்.
அவளோ மடியில் படுத்திருந்த கிட்டுவைப் பார்க்க,
அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கையை நக்கியது கிட்டு.
Hehehehe...naaiku evlooo problem pa, che!
ReplyDelete:)
Deleteநன்றாக எழுதி உள்ளீர்கள்.கதையின் முடிவு வேடிக்கையாகவும் எதிர்பாராததாகவும் இருந்தது.. நன்றி
ReplyDeleteMikka nandri KP. En valaipookkal anaithayum http://a-curious-drop-in-the-bucket.blogspot.in endra enayathalathirku eduthu chendru vitten. Thaangal ini idhai padikkumaaru kettu kolgiren. Nandri!
DeleteThat was one humorously written tale with an unexpected humorous end, Malini!
ReplyDeleteAge is catching up with me and I was wishing for a bigger font :)
Fixed the font! Thanks for the feedback Suresh.
Delete