Saturday, February 23, 2013

ஓரு பயணத்தில்....

ஓரு பயணத்தில்....


‘ஹலோ, எப்டி இருக்கேள்?.... நான் பச்சுல பொய்ண்டிருக்கேன். ஆங், ஹோசூர் தாண்டிடுத்து…..’
அந்த பலத்த குரல் என்னை ஆட்கொண்டிருந்த நித்திரா தேவியை ஓட ஓட விரட்டி அடித்தது. புதிதாய் வாங்கிய நாய்க்குட்டி முன்னிரவு படுத்திய பாட்டில் மிகவும் களைத்துப் போயிருந்த நான், கண்ணைத் திறக்க மனமின்றி அப்படியே சாய்ந்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன்.
‘டிஃபன் சாப்டாச்சா?.... ம்ம், கிரிஜா கையிலே இட்லி மொளகாப் பொடி பாக் பண்ணிக் குடுத்தா. எங்கேயானும் நிறுத்தறச்சே சாப்ட்டுக்கறேன்.’
இந்த மாமி என்ன சாப்பிட்டால் பச்சில் இருக்கறவங்களுக்கு என்ன? என்று நினைத்துக் கொண்டேன். குளிர் சாதனப் பேருந்து ஆதலால் வெளி சப்தங்கள் குறைந்து மாமியில் குரல் மேலோங்கிக் கேட்டது. தற்போது உறக்கம் முற்றிலுமாகக் கலைந்து விட்டது. கைப்பையில் இருந்த ஐ போடை தட்டிவிட்டு காதுகளில் மாட்டியிருக்கலாம் தான். ஆனால், இந்த ஃபேஸ்புக் காலத்தில் வர்ச்சுவல் ஆக வம்புக் கலையும் நமக்கு, ‘லைவ்’ வம்பு கசக்குமா என்ன?
‘கெளம்பரத்துக்கு முன்னாடி காபிப் பொடி தீர்ந்துடுத்து. அவளண்டை சொல்லி வரச்சே கொஞ்சம் அரைச்சுண்டு வரச் சொல்லுங்கோ’
‘அந்த அவள் யாராயிருக்கும்? மாமியின் பெண்ணா? இந்த மாமியே ‘ஆத்துக்கு’ போற வழியில் அரைச்சுண்டு போகக்கூடாதா? ஹ்ம்ம், மத்தவங்களை வேலை வாங்கறதுல ஒண்ணும் கொறைச்சல் இல்ல’ – இது என் எண்ணம். என் நித்திரையைக் கலைத்த மாமியைக் கொஞ்சம் ராட்சசி மாமியாகக் கற்பனை செய்தேன். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன்.
சிற்றுண்டிக்காக பேருந்து ஒரு உயர் ரக உணவு வளாகத்தில் நின்றது. நின்றதுதான் தாமதம், மாமி இட்லி டப்பாவைத் திறந்தாள். மிளகாய்ப்பொடியுடன் நல்லெண்ணை கலந்த வாசம் நாசியைத் துளைத்தது. மாமி இட்லியைப் பிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். பேருந்தில் கொடுத்த தண்ணீர் பாட்டிலையும் அருகில் வைத்துக் கொண்டாள்.
நான் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினேன். ‘மேக்டொனால்ட்’ இன் உரளைகிழங்கு வறுவல் வாசமும், ஐயர் பவனின் தோசை மற்றும் ஃபில்டர் காபி மணமும், கோஃபீ டே வின் ‘கேப்புசினோ’ வாசமும் காற்றில் கலந்து வந்து மூளையைக் குழப்பின. இறுதியில் தமிழகம் வென்றது. ஐயர் பவனுக்குள் நுழைந்து இட்லி காபி ஆர்டர் செய்தேன்.
தனியே ஹோட்டலில் நுழைந்து டிஃபன் ஆர்டர் செய்யும் பெண்ணை சர்வர்கள் சற்று வித்தியாசமாகப் பார்த்தார்கள். ம்க்டொனல்டிலொ, கோஃபீ டே விலோ இந்த விழி அம்புகளைத் தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை. மாமி தூக்கத்தைக் கலைத்ததால், தலைவலி வேறு வந்துவிட்டது. இதற்கு மருந்து ஃபில்டர் காபிதான். கேப்புசினோ இல்லை.
உண்டி முடித்து விட்டு மீண்டும் பச்சில் ஏறிக் கொண்டேன். மாமி இட்லியைக் கபளீகரம் செய்து முடித்திருந்தாள். ஏசி பச்சாதலால் ஜன்னலைத் திறந்து கை கழுவ முடியவில்லை. ‘கிரிஜா’ கொடுத்திருந்த டிச்சுச் நல்லெண்ணைப் பிசுக்கைப் போக்குவதில் தோல்வி அடைந்திருந்தன போலும். தவித்துக் கொண்டிருந்தாள்.
‘மாமி, வெளியே, டஸ்ட்பின், வாஷ் ஏரியா இருக்கு. அங்க போய் கை கழுவிக்குங்க.’ என்றேன் நான்.
‘ரொம்ப தாங்க்ச் மா’ என்றபடி எழுந்து சென்றாள் மாமி.
ஓரு காலி வாடர் பொட்டில் உம் டிச்சு வும் தரைக்கு உணவாவதைத் தடுத்து, சுற்றுச் சூழலைக் காப்பாற்றிய பெருமித்த்தில் என் இருக்கைக்குப் போய் அமர்ந்து கொண்டேன்.
பின்சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது. என் பையில் இருந்த புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். பேருந்து கிளம்பியது.
‘ஆங்க், நாந்தான்.. ரொம்ப நன்னா இருந்துதுடீம்மா. காலங்கார்த்தால காபி சாப்டுட்டு கெளம்பினது. வெறும் வயத்துக்கு மரமரக்க பேஷா இருந்துது.’
புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்திருந்த எனக்கு, எரிச்சலாக வந்தது. அதே சமயத்தில், மறுமுனையில் பேசியது யாராக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றியது. நிச்சயம் கிரிஜா வாகத்தான் இருக்கும். அவள்தானே டிஃபன் கட்டிக் கொடுத்திருந்தாள்! கிரிஜா யார், மாமியின் இன்னொரு பெண்ணா? தெரியவில்லை.
‘சாப்பாடா, பாத்துக்கறேன். கவலைப்படாதே. வழியில திருவண்ணாமலையில் நிறுத்துவான். அங்கே சாப்டுக்கறேன்.’
இந்த ‘எங்கு போனாலும் கூடவே வரும்’ சமாச்சாரங்களினால் எப்பவும் தொல்லைதான். நாய்க்குட்டியாய் இருந்தால் கூடத் தேவலாம். மொபைல் டவராக இருக்கவே கூடாது. மாமியின் சிக்னல் கட் ஆகிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
‘என்ன, சொல்றது சரியா காதுல விழலை, கட்டாகி கட்டாகி கேக்கறது. சரி அப்புறம் பேசறேன்.’ – மாமி மொபைலை தங்க மாளிகை பர்சில் வைத்து பத்திரப் படுத்திக் கொண்டாள்.
என்னுள் இருந்த அரக்கி வெற்றிச்சிரிப்பு சிரித்துக் கொண்டாள். கொஞ்சம் முன்னாலேயே வேண்டிக் கொண்டிருக்கலாமோ என்னவோ?
திருவண்ணாமலையில் பேருந்து நின்றது. கையில் கட்டிக் கொண்டு வந்திருந்த தயிர் சாதம் அடங்கிய ‘டப்பர்வேர்’ டப்பாவை எடுத்தேன். முன்னிருக்கை மாமி இறங்கிச் சென்றாள். செல்கையில், என் கையில் இருந்த தயிர் சாத்ததை அவள் ஏக்கத்துடன் பார்த்தாற்போல் தோன்றியது. இட்லி கொண்டு வந்த மாமிக்கு தயிர் சாதம் பாக் செய்ய நேரமில்லயோ என்னவோ? அல்லது கிரிஜா கட்டி வைத்திருந்த பொட்டலத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டாரோ?
பேருந்து உறுமியது. மாமி மூச்சிரைக்க வந்து ஏறிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்குள், மாமி லைவ் அப்டேட்டைத் தொடர்ந்தாள். சிக்னல் மறுபடி கிடைத்துவிட்டது போலும். ‘என்னமோ, வெஜிடபில் பிரியாணி ந்னு குடுத்தான். சகிக்கலை. நெஞ்சைக் கரிச்சுண்டு வர்ரது. நல்ல வேளை எறங்கின எடத்துல இஞ்சி மொரபா வாங்கிண்டேன். ஒன்னு வாயில அடக்கிண்டா சரி ஆயிடும்….. சரி……ம்ம்…..ம்ம்ம்…. வெச்சுடறேன்.’
சற்று முன் சாப்பிட்ட மாங்காய் ஊருகாய்யின் சுவை நாக்கில் இன்னும் இருந்த்து. மாமிக்குக் கொஞ்சம் ஆஃபர் செய்திருக்கலாமோ? கண்ணை மூடிக்கொண்டேன்.
‘ஜிப்மெர், ஜிப்மெர் எல்லாம் எறங்கு’ – நடத்துனர் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். வாரி சுருட்டிக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினேன். மாமியும் ஜிப்மெர் தான் போலும். எனக்கு முன்னமே இறங்கி விட்டிருந்தாள். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.
‘ஏண்டீம்மா, கொழ்ந்த, சித்த இங்க வரியா?’
‘என்ன மாமி’
‘நீயும் இந்திரா நகர் தான் போறியாம்மா?’
‘ஆஅமாம் மாமி’
‘ஒரு ஒத்தாசை செய்யேன். கொஞ்சம் லக்கேஜ் இருக்கு. அதோட மழை பெஞ்சிருக்கு.ஹவாய் செருப்பு வழுக்கி விட்டுடுமோன்னு பயம்மா இருக்கு. கொஞ்சம் ஆத்து வரைக்கும் துணைக்கு வந்துட்டுப் போறியா?’
எனக்கு செல்ல விருப்பமில்லைதான். அதே சமயத்தில் முடியாது என்று சொல்லவும் மனமில்லை. சரியென்றேன். அவ்வழியே போன ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். மாமி என் கையைப் பிடித்துக் கொண்டு மெள்ள, காலை நன்கு ஊன்றி வைத்து நடந்து வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
மாமியின் வீடு வந்தது. இறங்கிக் கொண்டோம்.
‘கண்டிப்பா உள்ள வந்து காபி சாப்ப்டுட்டு தான் போணும்’ என்பது மாமியின் நிபந்தனை. உள்ளே நுழைந்தேன். ஒரு சிறிய ஹாலில் போடப்பட்டிருந்த ஒற்றைக் கட்டிலில் ஒரு கிழவர் படுத்துக் கிடந்தார். அவர்தான் மாமாவாக இருக்க வேண்டும். கீழே மூத்திரப் பை தொங்கிக் கொண்டிருந்த்து.
உட்காரு ம்மா என்று சொஃபாவைக் காட்டினாள். உள்ளே சென்றாள். சிரிது நேரத்தில் மணக்க மணக்க காபியுடன் வந்தாள்.
‘இவர் என் ஆத்துக்காரர். ஆல் இண்டியா ரேடியோயில் வேலை பார்த்து ரிட்டயர் ஆனவர். சித்த காலம் முன்னாடி, கை கால் விழுந்து போச்சு. படுத்த படுக்கையாய் ஆயிட்டார். காதும் சரிவர கேக்கறதில்லை. இவரோட எப்பவும் சத்தமாவே பேசிப் பழகினதுல குரல் குறையவே மாட்டேங்கறது. மாமி சிரித்துக் கொண்டாள்.
‘எங்க ஒரே பையன் சந்தோஷ், இங்கே பெக் ல தான் படிச்சான். பேங்களூரில் நல்ல வேலையில் இருக்கான். அங்கேயே குடும்பத்தோட செட்டில் ஆயிட்டான். ஒரே பேரன் – அஷ்வத். ஒரு வயசாறது. மாட்டுப்பொண்ணு கிரிஜா, தங்கமான பொண்ணு. மாமி நான் கேட்காமலேயே குடும்ப விவரங்களை அவிழ்த்துக் கொட்டினாள்.
இவருக்கு பாண்டி தவிர வேற எங்கேயும் பொருந்தலை. பையன் கூப்பிட்டான். ஆனா நாங்க போகலை. எனக்கும் இப்பொ முன்ன மாதிரி எடுத்துப் போட்டுண்டு செய்ய முடியரதில்லை. அதனாலே, ஆத்தோட ஒரு நுர்செ ஏற்பாடு பண்ணிண்டு இருக்கோம். கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாவும் இருக்கா. சௌரியமா இருக்கு.
ஆனா எனக்குதான் அப்பப்போ பேரன் ஞாபகம் வரும். அப்பொவெல்லாம் அவளைப் பார்த்துக்கச் சொல்லிட்டுக் கெளம்பிடுவேன். பேரனைப் பார்த்தா மனசெல்லாம் நெரைஞ்சுடும். திரும்பி வர பையன் வொல்வொ டிக்கெட் போட்டுக் கொடுப்பான். இவருக்கோ நான் திரும்பி வரதுக்குள்ள இருப்பே கொள்ளாது. பத்து தடவை ஃபோன் பண்ணிடுவார். மாமி வெள்ளந்தியாக்ச் சிரித்தாள். எனக்கு என்னவொ போல் இருந்த்து.
மாமி என்னை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். மனது பாரமாக இருந்தது. அந்த வெகுளியை ராட்சசியாக்க் கற்பனை செய்த்தற்காக என்னை நானே கடிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment